சட்டசபை அமர்விலிருந்து பாதியில் வெளியேறிய ஆளுநர்
தமிழ் நாட்டின் ஆளுநர் ஆர் .என் . ரவி அவர்களின் பலதரப்பட்ட பேச்சுக்களால் தமிழகத்தில் அவருக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் சட்டசபை கூட்டத்தொடரில் இவரது செயற்பாடு பல வித சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற நிலையில் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் ஆரம்பமானது.இதற்கு முன்பு தமிழ் நாட்டை தமிழகம் என்று கூறுவதே சரியாக வரும் என்று கூறி வந்த ரவி இன்றும் விபரீத பேச்சுக்களை வெளியிட வாய்ப்புள்ளது என்பதை தெரிந்த தமிழக அரசியல் தலைவர்கள் அவரது வார்த்தைகளை மிகவும் கூர்ந்து கவனித்து வந்தனர்.
இன்றைய உரை வழமை போல் தமிழக அரசினால் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட நிலையில் அவர் அந்த உரையை முழுமையாக வாசிக்காமல் அதில் இருந்த சில சொற்களை தவிர்த்திருக்கின்றார். அவை திராவிட மாடல் , தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது , பெரியார் , அம்பேத்கர் போன்ற சொற்களே ஆகும் . இதற்கு முன் ரவி பேச ஆரம்பிக்க முன்னே அவரது பேச்சை தொந்தரவு செய்யும் வகையில் வாழ்வுரிமை கட்சி உறுப்பினர்கள் சத்தம் எழுப்பினர் .
இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் அவர்கள் சட்டசபையில் ஆளுநர் பேசிய குறிப்புகள் அவை குறிப்பில் இடம்பெறக்கூடாது என்றார் தொடர்ந்து இது தொடர்பில் தீர்மானமும் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட நிலையில் தேசிய கீதம் இசைக்கப்பட முன்னர் பாதியிலேயே ஆளுநர் வெளியேறியுள்ளார்.
தமிழ் நாட்டின் சட்டசபை வரலாற்றில் முதல் முதலாக பாதியில் வெளியேறிய ஆளுநராக இவர் பார்க்க்கப்படுகிறார்.