இந்தியா

சென்னையில் தனது அம்மாவுக்காக 5 கோடி செலவில் ‘தாஜ்மஹால்’ கட்டிய மகன் சொல்லும் காரணத்தின் நெகிழ்ச்சி பின்னணி!

திருவாரூர் அருகே அம்மையப்பன் கிராமத்தைச் சேர்ந்த அமுர்தீன் , சென்னையில் தொழிலதிபராக உள்ளார். இவர் தனது தாயின் நினைவாகக் கட்டியுள்ள மணிமண்டபம் பார்ப்பதற்கு ’தாஜ் மஹாலை’ போலவே காட்சியளிப்பது, அருகிலுள்ள கிராம மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ”எங்களுடைய தாயின் திடீர் மறைவை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் எங்களுடன் இருப்பது போலவேதான் எங்களுக்குத் தோன்றியது. அவருக்குச் சிறந்த முறையில் மரியாதை செலுத்த வேண்டும் என்பதற்காகவே ஒரு மணிமண்டபம் கட்டினோம். அது இப்போது தென்னகத்து ’தாஜ்மஹாலாக’ காட்சியளிக்கிறது” இந்த மணிமண்டபத்தைக் காண்பதற்கு சாதி, மதம் பேதமின்றி அனைவருக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அமுர்தீன் குறிப்பிடுகிறார். அமுர்தீனின் தாய் ஜெய்லானி பீவி, கடந்த 2020ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தனது தாயின் அந்த திடீர் மறைவு, தங்களுடைய குடும்பத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனக் கூறுகிறார் அமுர்தீன்.

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கிராமத்தில், கடந்த ஜூன் 2ஆம் தேதி எளிமையான முறையில் ஜெய்லானி பீவியின் நினைவிடம் திறக்கப்பட்டது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில், 8 ஆயிரம் சதுர அடி அகலத்தில் இந்த நினைவிடம் அமைந்துள்ளது. மேலும் 46 அடி உயரத்தில் அங்கு மினார் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில், தனது தாயாரின் ஜிம்மா மசூதியும், அதன் ஒருபுறம் பிரமாண்டமான பள்ளிவாசல் கட்டடமும், மறுபுறம் மாணவர்கள் தங்கிப் படிக்கும் வகையில் மதரஸா பள்ளியும் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அமுர்தீன்.

”உலகிலுள்ள அனைத்து மனிதர்களுக்கும் தாய், தந்தையர்தான் இன்றியமையாதவர்கள். அவர்களைவிட வேறு எந்த சொத்தும் பெரிதல்ல. எனவே எங்கள் தாய்க்கு மரியாதை செய்ய வேண்டுமென்பதற்காக எழுப்பப்பட்ட இந்த நினைவிடத்தின் கட்டடச் செலவிற்கு நாங்கள் கணக்கு பார்க்கவில்லை,” என்கிறார் அமுர்தீன். “எங்கள் தந்தை ஷேக்தாவுத் 1989ஆம் ஆண்டு மறைந்தார். அன்றிலிருந்து எங்கள் குடும்பத்தின் அச்சாணியாக இருந்து, எங்கள் அனைவரின் வளர்ச்சிக்கும் பக்கபலமாக இருந்தவர் எங்கள் தாய் ஜெய்லானி பீவி. என் உடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரிகள். எங்கள் ஐந்து பேருக்கும் எல்லாமுமாக இருந்தவர் அவர்.

எங்கள் மொத்த குடும்பத்திற்கும் எங்கள் தாய் ஜெய்லானி பீவி மீது மிகப்பெரும் மரியாதை உண்டு. அவர் எப்போதும் அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்,” என பிபிசி தமிழிடம் தனது தாய் குறித்துப் பேசத் தொடங்குகிறார் அமுர்தீன். அவர் தொடர்ந்து பேசுகையில், “2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஏற்பட்ட அவருடைய திடீர் மறைவு எங்கள் அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்தது. அவர் இறந்துவிட்டார் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. அவர் எங்களுடன் இருப்பது போன்ற உணர்வுதான் எங்கள் அனைவருக்குமே இருந்தது,” தங்கள் தாயின் மறைவு அவர்களது மனதில் ஏற்படுத்திய வெற்றிடத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

பொதுவாக இஸ்லாம் மதத்தில், இறந்தவர்களின் உடலை ’கபர்ஸ்தானத்தில்தான்’ அடக்கம் செய்வார்கள். ஆனால் தங்களுடைய தாய் தங்களின் கூடவே இருக்க வேண்டும் என்பதற்காக தன் குடும்பத்திற்குச் சொந்தமால உள்ள நிலத்திலேயே, ஜெய்லானி பீவியின் உடலை அடக்கம் செய்ததாக அமுர்தீன் தெரிவித்தார். இப்போது தாஜ்மஹால் போலக் காட்சியளிக்கும் ஜெய்லானி பீவியின் நினைவிடம் குறித்து அமுர்தீன் பேசுகையில், “எங்கள் அம்மாவின் நினைவாக ஒரு மணிமண்டபம் கட்ட வேண்டுமென்றுதான் முதலில் நினைத்தோம். ஒரு சின்ன பள்ளிவாசல், ஒரு மதரஸா, அம்மாவின் அடக்க ஸ்தலம், அதற்கு மேல் சின்னதாக ஒரு கல்லறை (tomb) ஆகியவை மட்டும்தான் எங்களுடைய திட்டமாக இருந்தது. ஆனால் அது இப்போது ஒரு வெள்ளை மாளிகையாக, ஒரு தாஜ் மஹால் போலக் காட்சியளிக்கிறது. இதை எங்கள் அம்மாவின் எண்ணங்களுடைய வெளிப்பாடாகத்தான் பார்க்கிறோம்,” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

அமுர்தீனின் அம்மாவுக்கு முகமது அப்துல் கான் என்ற ஒரு வளர்ப்பு மகனும் இருக்கிறார். அவரும் அமுர்தீனும் இணைந்தே தொழில் செய்து வருகின்றனர். தாஜ்மஹால் போலக் காட்சியளிக்கும் இந்த நினைவிடத்தின் கட்டுமானத்திற்கான திட்டமிடல் குறித்துப் பேசிய அவர், “அதை அவரும் அவரது உடன்பிறவா சகோதரரும் இணைந்தே நினைவிடத்திற்கான வடிவமைப்பையும் தேர்வு செய்ததாக” கூறுகிறார். அவர்கள், தங்களுடைய அம்மாவுக்கான நினைவிடத்தை அமைப்பதற்கு திருச்சியைச் சேர்ந்த ஒரு கட்டடக் கலை நிறுவனத்திடம் பேசியுள்ளனர். அவர்களிடம் தங்கள் அம்மாவின் நினைவிடம் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்த எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்கள். அதை உள்வாங்கிய கட்டடக் கலை நிறுவனத்தினர், ஒரு நினைவிட மாதிரியை வடிவமைத்து அவர்களுக்கு அனுப்பியுள்ளார்கள். “எனக்கும், முகமது அப்துல் கானுக்கும் அந்த மாதிரி வடிவம் மிகவும் பிடித்திருந்தது. ஒருபுறம் அது பார்ப்பதற்கு தாஜ்மஹால் போல இருந்தது.”

“பிறகு நினைவிடத்திற்கான கட்டுமானப் பணியைத் தொடங்கினோம். எங்கள் தாய் மிகவும் தூய்மையான எண்ணம் கொண்டவர். ஏழைகளுக்கும், கஷ்டத்தில் இருப்பவர்களுக்கும் உதவ வேண்டும் என நினைப்பவர். எனவே அவருடைய மனதைப் பிரதிபலிக்கும் விதமாக இந்தக் கட்டடத்தை வெள்ளை நிறத்தில் கட்டவேண்டும் என முடிவு செய்தோம்,” என்று விளக்குகிறார் அமுர்தீன். அதற்காக அவர்கள் பளிங்கு கற்களைத் தேர்வு செய்தார்கள். ஆனால், இந்த நினைவிடத்திற்கு இத்தாலிய பளிங்கு கற்களைவிட, இந்திய பளிங்கு கற்கள்தான் சிறப்பானதாக இருக்கும் என்று கட்டுமானப் பணியை மேற்கொண்ட நிறுவனம் அவர்களுக்குப் பரிந்துரைத்தது. அதனால், இதற்காகவே ராஜஸ்தானில் இருந்து, பிரத்யேகமாக வெள்ளை நிற பளிங்கு கற்களை வரவழைத்துள்ளார்கள், அமுர்தீன் மற்றும் அவரது சகோதரர். “நினைவிடத்தின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதி ஆகிய இரண்டுமே ஒன்று போல் இருக்க வேண்டும் எனக் கவனித்துக் கொண்டோம். கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனமும் இந்தப் பணியில் மிகவும் சிறப்புடன் பணியாற்றினர்,” என்று அவர் கூறுகிறார்.

இந்தக் கட்டட பணிக்காக ராஜஸ்தான், பிகார், ஹரியானா ஆகிய பகுதிகளிலிருந்து பிரத்யேக கட்டட கலைஞர்களை வரவழைத்ததாகக் கூறுகிறார் அமுர்தீன். இதுகுறித்து அவர் பேசும்போது, “இந்த நினைவிடத்தைக் கட்டி முடிப்பதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. பிரத்யேகமான இந்தக் கட்டுமான பணிக்காக, ராஜஸ்தான், பிகார், ஹரியானா ஆகிய இடங்களிலிருந்து கலைஞர்களை வரவழைத்தோம். இத்தகைய பணிகளில் அவர்களுடைய வேலையின் நுட்பம் அபாரமானது.” நினைவிடத்தை உருவாக்குவதற்காக வரவழைக்கப்பட்ட கலைஞர்கள், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு இங்கேயே தங்கி, மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டதாகக் கூறுகிறார், அமுர்தீன். ஒருபக்கம் கட்டுமானப் பணி நடந்துகொண்டிருக்கும். மறுபக்கம், கலைஞர்கள் பளிங்கு கற்களைச் செதுக்கும் பணியில் ஈடுபட்டிருப்பார்கள்,” என்று அவர் குறிப்பிடுகிறார். “தோராயமாக இதற்கு ஆன செலவு சுமார் 5 கோடிக்கு உள்ளாக இருக்கும்,” என்று கூறுகிறார்கள். அவர்களது அம்மாவுக்குச் சொந்தமான ‘லிவாலுள் ஹம்’ என்ற தொண்டு நிறுவனம் ஒன்று நீண்டகாலமாக இயங்கி வருகிறது. அந்தத் “தொண்டு நிறுவனத்திலிருந்த எங்கள் அம்மாவின் சொத்துகளை இதற்காக நாங்கள் பயன்படுத்திக்கொண்டோம்,” என்கிறார் அமுர்தீன். தற்போது ஜெய்லானி பீவியின் நினைவிடத்தில் அமைந்துள்ள மதரஸா பள்ளியில் 10 குழந்தைகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படுவதாக நினைவிட மேலாளர் கூறுகிறார்.

இவ்வளவு மெனக்கெடல், கற்பனைத் திறன், உழைப்பு இந்த நினைவிடக் கட்டுமானத்தில் பங்கு வகித்திருந்தாலும், தங்களுடைய தாயின் நினைவிடம் ‘தாஜ்மஹால்’ போன்ற அமைப்பைப் பெற்றது மிகவும் தற்செயலானது என்று அமுர்தீன் குறிப்பிடுகிறார். அதுகுறித்து அமுர்தீன் பேசும்போது, “அம்மாவின் நினைவாக நினைவிடம் ஒன்றை உருவாக்க நினைத்தோம். கட்டடப் பணி தொடங்கிய பிறகு, இதுவொரு வரலாற்றுச் சின்னமாக விளங்க வேண்டுமென்ற எண்ணம் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரிடமும் இருந்தது. ஆனால், அதை தாஜ்மஹால் போல் அமைக்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிடவில்லை,” என்று கூறினார். வெள்ளை நிற பளிங்கு கற்களை உபயோகித்திருப்பதே தங்கள் தாயின் நினைவிடம் ‘தாஜ்மஹால்’ போன்ற தோற்றத்தைப் பெற்றதற்கு முக்கியக் காரணம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். தற்போது தங்களுடைய தாயின் நினைவிடம் இத்தகைய பிரமாண்ட தோற்றம் பெற்றதற்குக் கலவையான விமர்சனங்கள் வருகின்றன என்று கூறும் அமுர்தீன், “ஒரு சிலர் வெகுவாகப் பாராட்டுவதாகவும் சிலர் இவ்வளவு பிரமாண்டம் தேவையில்லை என விமர்சிப்பதாகவும்” தெரிவித்தார். ஆனால் யார் என்ன கூறினாலும், “ஒரு தாயின் அன்புக்கு முன்னால் வேறு எதுவுமே பிரமாண்டம் இல்லை” என்பதே அமுர்தீன் குடும்பத்தினரின் நிலைப்பாடாக இருக்கிறது.

Back to top button