இந்திய மாகாணம் மணிப்பூரில் உயிருடன் கொளுத்தப்பட்ட சுதந்திர போராட்ட தியாகியின் மனைவி – கொடூரத்தின் உச்சம்!
இந்தியாவின் மணிப்பூர் மாகாணத்தில் இருந்து வெளிவரும் தகவல்கள் அனைத்தும் கற்பனை செய்ய முடியாத திகில் சம்பவங்கள் என்றே கூறுகின்றனர். வன்முறை குழு ஒன்றால் பெண்கள் இருவர் நிர்வாணமாக ஊர்வலம் நடத்தப்பட்ட சம்பவமும், பணியிடத்தில் பதுங்கியிருந்த இரு இளம் பெண்களை கூட்டு வன்புணர்வுக்கு இரையாக்கியதும், எதிர்த்து போராடிய ஆண்களை அடித்தே கொன்றுள்ளதும் மட்டுமின்றி, வெளிவராத பல பகீர் சம்பவங்களும் மணிப்பூரில் நடந்தேறி வருகிறது. இந்த நிலையில், Kakching மாவட்டத்தில் Serou கிராமத்தில் 80 வயது பெண்மணி ஒருவரை, அதுவும் சுதந்திர போராட்ட தியாகியின் மனைவியை குடியிருப்புக்குள் வைத்து பூட்டி, உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து நடுங்க வைத்துள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களால் ஆதரிக்கப்பட்டவர் Churachand Singh. இவரது மனைவியே, ஆயுதம் ஏந்திய வன்முறையாளர்களால் உயிருடன் கொளுத்தப்பட்டவர்.
இச்சம்பவம் மே 28ம் திகதி நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்களுக்கு முன்னர் Serou கிராமம் மக்கள் விரும்பி செல்லும் ஒரு அமைதியான பகுதியாகவே இருந்துள்ளது. சம்பவத்தன்று 80 வயதான Ibetombi தமது குடியிருப்பிலேயே சிக்கிக்கொண்டுள்ளார். அவரது குடியிருப்பை வன்முறையாளர்கள் வெளியில் இருந்து பூட்டியுள்ளனர். பின்னர் மொத்தமாக நெருப்பு வைத்துள்ளனர். தகவல் அறிந்து அவரது உறவினர்கள் சம்பவயிடத்திற்கு வந்த போது, மொத்தமாக அந்த குடியிருப்பை நெருப்பு விழுங்கியிருந்தது. வயது மூப்பு காரணமாகவே Ibetombi தனியாக குடியிருப்பில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது என உறவினர்கள் கூறுகின்றனர்.