இந்தியா

தென்னிந்தியாவில் பேய் பிடித்ததாக மகனை மந்திரவாதியிடம் அழைத்து சென்றதால் நேர்ந்த விபரீதம்!

தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவில் சிறுவன் மந்திரவாதியால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகாராஷ்டிராவின் சாங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் ஆர்யன் லாண்டே (14). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலம் பாதித்துள்ளது. இதனால் பதறிப்போன பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.

இதேவேளை, கர்நாடக மாநிலத்தில் உள்ள மந்திரவாதி ஒருவர் குறித்து சிறுவனின் பெற்றோர் அறிந்துள்ளனர். அவரிடம் அழைத்துச் சென்றால் தங்கள் மகனுக்கு குணமாகிவிடும் என கருதிய அவர்கள், கர்நாடக மாநிலம் ஷிர்கூருக்கு ஆர்யனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மந்திரவாதி அப்பாசாகேப் காம்ளே சிறுவனுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறியுள்ளார். இதனால் பேயை விரட்ட வேண்டும் எனக் கூறி, ஆர்யனை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுவன் நிலைகுலைந்து போனார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர்.

மேலும், மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், ஆர்யன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மூடநம்பிக்கை நல ஆர்வலர்கள், மந்திரவாதி மீது பொலிஸில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் மந்திரவாதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button