தொண்டர்களுக்கு சாமியாரை விட்டுவிட்டு தேர்தல் பணியை பார்க்குமாறு உதயநிதி அட்வைஸ்
சாமியார் மீது வழக்கு தொடர்வதை விட்டுவிட்டு மக்களவை தேர்தல் பணிகளை பாருங்கள் என்று தொண்டர்களுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுரை வழங்கியுள்ளார். தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை ஒழிப்பது போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி” என்று பேசியிருந்தார்.
இவரின் பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பி வந்தன. ஆனாலும், உதயநிதி, தான் பேசியது சரி என்றும், வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் என்றும் கூறியிருந்தார். இதனையடுத்து, உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சனாதனம் விவகாரம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி தனது தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் அந்த அறிக்கையில்,”சாமியாரின் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மையை எரிப்பது போன்ற நேரத்தை வீணடிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். தி.மு.க. இளைஞரணியின் 2 -வது மாநில மாநாட்டு பணிகள், மக்களவை தேர்தல் பணிகள் என ஏராளமான பணிகள் நமக்கு உள்ளன. என் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை சட்டத்துறை உதவியுடன் சட்டப்படி எதிர்கொள்வேன்” எனக் கூறியுள்ளார்.