இந்தியா

தமிழக கோவை பொலிஸ் டிஐஜி தற்கொலை குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து என்ன?

தமிழகத்தில் கோவை மாவட்ட சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் தற்கொலைக்கு பணிச்சுமை காரணம் இல்லையென்றும் , மனஅழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாகவே தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், “கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஓய்வு பெற்ற நீதியரசர் சி.டி. செல்வம் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை என்ன ஆனது? காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க, தமிழக காவல்துறையில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் என்ன? காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் தற்கொலை என்பது அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன என்று, தமிழக அரசு, தீவிர விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில்,”விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உரிய விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் நிலையில் பிரச்னைகளுக்கு தற்கொலை ஒன்றே தீர்வு அல்ல என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும். அதே நேரத்தில் காவல்துறையில் நிலவும் பணி சுமையை குறைக்கவும், காவல்துறையினருக்கு உரிய ஓய்வு அளிக்கவும், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை காவல்துறையினருக்கு உரிய உடல், மன நல ஆலோசனைகள் வழங்கவும் தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த தருணத்தில் வலியுறுத்துகின்றேன்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,”காவல்துறையை பணியாக நினைக்காமல் வாழ்க்கையாக நினைத்தவர். குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற அவர், தமக்கு இ.கா.ப தவிர வேறு எந்த பணியும் தேவையில்லை என்று கூறி கேட்டுப் பெற்றவர். காவல்துறையில் பணியாற்றும், காவல்துறையில் சேர விரும்பும் ஏராளமான இளைஞர்களின் நாயகனாக விளங்கியவர். இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

அத்துடன், வைகோ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில்,”தமிழக காவல்துறையில், கோயம்புத்தூர் சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டு மாண்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. படித்துப் பட்டம் பெற்று, காவல்துறையில் உயர் பதவிக்கு வந்த விஜயகுமார் அவர்கள் எத்தகைய மன அழுத்தத்திற்கு ஆளானார் என்பதை யூகிக்க முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், காவல்துறையினருக்கும் என்னுடைய கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Back to top button