இந்தியா

இரண்டு நாட்களில் பல ஆயிரம் கோடி இழப்பு : யார் இந்த அதானி?

அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை எதிரொலியாக, அதானி குழுமம் இரண்டே நாட்களில் 4 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.

அதானி குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்கள் முறைகேடான நடவடிக்கை மூலம் பங்குச்சந்தையை ஏமாற்றி லாபம் சம்பாதித்ததாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த புதன்கிழமை ஆய்வறிக்கை வெளியிட்டது.

இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை திரும்ப பெற்றதால் மும்பை பங்கு சந்தையில் அந்த நிறுவனம் பெரும் சரிவை சந்தித்தது.

அதன்படி அதானி எரிவாயு நிறுவன பங்குகள் 20 சதவீதமும், அதானி பசுமை எரிசக்தி நிறுவன பங்குகள் 19.99 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன. அதானி வணிக நிறுவன பங்குகள் 18.52 சதவீமும், அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவன பங்குகள் 16 சதவீமும் வீழ்ச்சியை சந்தித்தன.

இதனால் அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு ஒட்டுமொத்தமாக 4 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் வீழ்ச்சியடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து 7-வது இடத்திற்கு அதானி தள்ளப்பட்டார்.

இந்நிலையில் போதிய ஆய்வு செய்யாமல் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையை வெளியிட்டதாக குற்றம்சாட்டியள்ள அதானி குழுமம், இது குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது.

2 ஆண்டு கால தீவிர ஆய்வுக்குப் பிறகே அந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டதாகவும், அமெரிக்காவிலுள்ள நீதிமன்றத்திலேயே அதானி குழுமம் வழக்கு தொடரலாம் என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

யார் இந்த அதானி?

 அதானி

அஹமதாபாத்தில் ஜவுளித் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த கெளதம் சாந்திலால் அதானி 1980களிலேயே கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வியாபாரம் செய்ய வந்தவர்.

1988ஆம் ஆண்டு தன் சகோதரர்களில் ஒருவரின் பிளாஸ்டிக் ஆலையை நிர்வகிக்க குஜராத் வந்து, தனக்கென சொந்தமாக ஒரு வணிக நிறுவனத்தைத் தொடங்கினார் அதன் பெயர் அதானி என்டர்பிரைசஸ்.

1994-ல் இந்திய பங்குச் சந்தையில் அதானி என்டர்பிரைஸ் நிறுவனத்தை பட்டியலிட்டார்.

1995-ல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை வென்றார். 2000-ல் சிங்கப்பூரைச் சேர்ந்த வில்மர் நிறுவனத்துடன் இணைந்து சமையல் எண்ணெய் விற்பனை செய்யத் தொடங்கினார். 2001-ல் சமையல் எரிவாயு விநியோகம் தொடங்கப்பட்டது.

அதன் பிறகு மின்சார உற்பத்தி, இயற்கை வளங்கள், போக்குவரத்து, மின் பகிர்மானம், பாதுகாப்பு, பழங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள், வீட்டுக் கடன் சேவைகள், விமான நிலைய நிர்வாகம், மெட்ரோ ரயில் சேவை, டேட்டா சென்டர் என கிடைத்த வியாபாரங்களில் எல்லாம் கால் பதித்தார்.

அதானி குழுமத்தில் பல நிறுவனங்கள் இருந்தாலும், ஆறு நிறுவனங்களை மட்டும் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டிருக்கிறது. முதன் முதலில் பட்டியலிட்ட அதானி எண்டர்பிரைசஸ் நிறுவன பங்கின் விலை கடந்த 1994-ல் 150 ரூபாயாக இருந்தது, கடந்த மார்ச் 2020 நிலவரப்படி 75,000 ரூபாயாக இருக்கிறது என அதானி குழுமம் தன் 2019 – 20 ஆண்டறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

இத்தனை வியாபாரங்கள் செய்தாலும் இன்று வரை அதானி சாம்ராஜ்யத்தின் மணிமகுடமாக விளங்குவது அவரது துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வியாபாரம் தான் என்கிறார்கள்.

இந்தியாவிலேயே சுமார் 300 கிலோமீட்டர் நீளத்துக்கு தனியார் ரயில் பாதைகளைக் கொண்டிருக்கும் ஒரே நிறுவனம் அதானிதான்

அதே போல இந்தியாவிலேயே மிகப் பெரிய தனியார் அனல் மின் நிலையம் வைத்திருக்கும் நிறுவனமும் அதானி குழுமம்தான்.

தன்னுடைய மின் நிலையங்களுக்காக இந்தோனீசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நிலக்கரி சுரங்கங்களை நடத்தி வருகிறார் அதானி.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதியில் தான், 2500 ஏக்கர் நில பரப்பில், உலகின் மிகப் பெரிய சோலார் உற்பத்தி நிலையத்தை அமைத்திருக்கிறார் கெளதம் அதானி.

வியாபாரத்திலும் தொழிலிலும் இவ்வளவு உயரத்தை எட்டிய கெளதம் அதானி கூச்ச சுபாவமுடையவர். ஆங்கிலத்தில் அதிக புலமை இல்லை. தன் சக போட்டியாளர்களைப் போல அதிகம் ஊடகத்தின் முன் தோன்றி பகிரங்கமாகவோ, பெரிய ஆளுமையுடனோ பேசக்கூடியவர் அல்ல. இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக இருக்கின்ற போதிலும் தன் தொழில்சார் கூட்டங்களை முகேஷ் அம்பானியைப் போல பொது வெளியில் பகிரங்கமாக நடத்தி கவனத்தை ஈர்க்கக் கூடியவர் அல்ல.

ஸ்டீவ் ஜாப்ஸைப் போல தன் சேவை குறித்தோ, தான் உற்பத்தி செய்யும் பொருள்கள் குறித்தோ மக்களிடம் நேரடியாக உரையாடக் கூடியவர் அல்ல. தான் சந்தித்தே ஆக வேண்டும் என்பவரை மட்டுமே சந்திப்பவர்.

தற்போது அதானியின் பின்புலத்தில் மோடியின் அரசு இருப்பதாக இருந்தாலும் குறுகிய காலத்திற்குள் அதானியின் வளர்ச்சி உலக பணக்காரர்களை மலைக்க வைத்தது என்றால் மறுப்பதற்கில்லை.

Back to top button