சந்திரபாபு நாயுடு கைது அதிர்ச்சியளிப்பதாக ZOHO நிறுவனர் கருத்து
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என சோஹோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. இவர் ஆந்திராவில், கடந்த 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.சில ஆண்டுகளாக இதற்கான விசாரணையை சி.ஐ.டி நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பின்பு, நேற்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, 14 நாள்கள் சந்திரபாபு நாயுடுவை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால், அவர் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட உள்ளார். இந்நிலையில், சோஹோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தனது ட்விட்டர் பதிவில்,”சந்திரபாபு நாயுடு நேற்று கைது செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு அவரை தெரியும், அவர் சோஹோ உட்பட பல நிறுவனங்களை ஆந்திராவிற்கு கொண்டு வர கடுமையாக உழைத்தார். நீதி வெல்லும் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.