ஆசியாஉலகச் செய்திகள்

நேபாள விமான விபத்துக்கு உள்ளானதில் 72 பேர் பலி

நேற்று(15.1.2023) நேபாளத்தின் பொகாரா சர்வதேச விமானநிலையத்திற்கு அருகில் 72 பேருடன் வந்த விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்துக்கு உள்ளானதில் அனைவரும் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது.

விமானத்தில் 68 பயணிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் இருந்துள்ளனர். தலைநகர் காத்மண்டுவில் இருந்து 200 கி.மீ தொலைவில் இருக்கும் சுற்றுலாத் தளமான பொகாராவை நோக்கிப் பயணித்த இந்த விமானம் தரையிறங்கும்போதே விபத்து நிகழ்ந்துள்ளது.

விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

மீட்புப் பணிகளுக்கு பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பொதுமக்கள் உதவுமாறு பிரதமர் புஷ்பா கமால் தஹால் அழைப்பு விடுத்துள்ளார். விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து புகை வெளிவருவது மற்றும் விமானப் பாகங்களைச் சூழ மக்கள் கூடி இருக்கும் படங்கள் மற்றும் வீடியோக்கள் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளன.

நேபாளத்தின் யெட்டி விமான சேவையால் இயக்கப்படும் இந்த இரு எஞ்சின் கொண்ட ஏ.டீ.ஆர் 72 விமானத்தில் இரு குழந்தைகள் மற்றும் 15 வெளிநாட்டினர் இருந்ததாக விமானச்சேவை பேச்சாளர் சுதர்ஷன் பார்டவுலா தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகளின்படி 40 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் ‘மேலும் சடலங்கள் மீட்கப்படலாம் என்று நாம் எதிர்பார்க்கிறோம்’ என இராணுவ பேச்சாளர் கிரஷ்ணா பண்டாரி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

Back to top button