பாகிஸ்தானில் திடீர் மின் துண்டிப்பு
பாகிஸ்தானின் தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட செயலிழப்பை அடுத்து நேற்று (23) நாடெங்கும் மின் துண்டிப்பு.
மிகப்பெரிய நகரான கராச்சி அதேபோன்று லாஹூர் மற்றும் பெஷாவர் உட்பட அனைத்து பிரதான நகரங்களிலும் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
தெற்கு பாகிஸ்தானில் மீடிறன் மாறுபாடு ஒன்றைத் தொடர்ந்து மின் கட்டமைப்பு செயலிழந்ததாக வலுசக்தி அமைச்சர் குர்ரும் தஸ்தகிர் தெரிவித்துள்ளார்.
எனினும் இது பெரிய பிரச்சினை இல்லை என்றும் விரைவில் மின்சாரம் திரும்பும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மின் துண்டிப்பால் நாட்டின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின்பிறப்பாக்கிகள் ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே இருப்பதால் மற்ற அரசு மருத்துவமனைகள் மின்வெட்டால் கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளன.
பாகிஸ்தானில் அந்நியச் செலாவணி குறைந்து நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில் மின்சக்திக்கு தேவையான புதைபடிவ எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது.
அரச அலுவலகங்கள் தனது மின் பயன்பாட்டை 30 வீதம் குறைப்பதற்கும் மின்சாரத்தை சேமிப்பதற்கு சந்தைகளை இரவு 8.30 க்கும் உணவு விடுதிகளை இரவு 10 மணிக்கும் மூடுவதற்கு அரசு இம்மாத ஆரம்பத்தில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.