சீனாவில் பரவும் மர்ம நோய்… பிரித்தானியர்கள் மீண்டும் மாஸ்க் அணிய முன்வர வேண்டும்: எச்சரிக்கும் நிபுணர்கள்
சீனாவில் பரவும் மர்ம நோய் தொடர்பில் பிரித்தானிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க தவறினால், இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சீர்குலையும் என முதன்மை நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியர்கள் தங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது மீண்டும் ஒருமுறை மாஸ்க் அணிய முன்வர வேண்டும் அல்லது மற்றொரு பெருந்தொற்றை எதிர்கொள்ள நேரிடும் என்று நிபுணர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நோயியல் நிபுணரான Donald Karcher தெரிவிக்கையில், சீனாவில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் மர்மமான நிமோனியா போன்ற தொற்று தற்போது ஐரோப்பாவையும் தாக்கியுள்ளது. கடந்த பல வாரங்களாக சீனாவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவரும் மர்ம நோயால் மருத்துவமனைகள் பல நிரம்பி வரும் நிலையில், உலக நாடுகள் பல தீவிர கண்காணிப்பில் உள்ளது.
இந்நிலையில், சிறார்கள் மட்டுமே இதில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்ற போதும், இந்தியா போன்ற அண்டை நாடுகளின் அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது ஐரோப்பாவிலும் அந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டென்மார்க் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், விழிப்புடன் இருப்பதன் மூலமும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும், வரவிருக்கும் விடுமுறை காலத்திலும் 2024 வரையிலும் பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொதுமக்கள் கூடும் இடங்களில் மாஸ்க் கட்டாயம் என்பதை மக்கள் பழக வேண்டும், பயணத்தின் போதும் மாஸ்க் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ள அமெரிக்க நோயியல் நிபுணரான Donald Karcher, தவறாமல் கைகளை கழுவவும் அல்லது கை சுத்திகரிப்பாளரைப் பயன்படுத்த வேண்டும் என கோரியுள்ளார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும், தனி மனித இடைவெளி கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்றார்.