இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்திய மாநிலமான கேரளாவில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது ஒரே நாளில் நூற்றுக்கணக்கில் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒருவர் இறந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் இணையத்தில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பால் 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 128 பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த மாநிலத்தில் மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,000 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 296 ஆக உள்ளது. மேலும் “கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், பயப்பட வேண்டியது இல்லை. வைரஸ் தொற்றுநோய்களை நிர்வகிக்க மருத்துவமனைகள் போதுமான அளவில் உள்ளன” என சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.