புதிய கொவிட் மாறுபாடு தொடர்பில் நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
தற்போது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொவிட் வைரஸ் திரிபான JN-1 துணை மாறுபாடு இலங்கையில் பரவுவது குறித்த அபாயத்தை மதிப்பிடுவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகத்துடன் இணைந்து மரபணு சோதனைகளை நடத்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்தியாவை வெகுவாக அச்சுறுத்திவரும் இந்தப் புதிய மாறுபட்ட கொவிட் தொற்றானது இலங்கையிலும் பரவ வாய்ப்புள்ளதாக கருதப்படுவதனாலேயே சுகாதார அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சு மேலும் கருத்து தெரிவிக்கையில், “செயற்திறன்மிக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சுகாதார அமைச்சு கொவிட்-19 பரிசோதனை முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, அண்மையில் நடத்தப்பட்ட சோதனைகளும் நம்பிக்கைக்குரிய முடிவுகளை அளித்துள்ளன. குறைந்த எண்ணிக்கையிலான கொவிட் – 19 வழக்குகள் மாத்திரமே பதிவாகியுள்ளன.
அதுமாத்திரமல்லாமல், சமீபத்திய மாதிரிகள் எதிர்மறையானவை என்றும் சுகாதார அமைச்சின் அறிக்கை கூறுகின்றது.”
இவ்வாறு நேர்மறையான விடயங்கள் காணப்பட்டாலும், நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பது முக்கியம் எனவும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது தவிரவும், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் சுவாச நோய்களின் பரவலைத் தடுப்பதற்கு முகமூடி அணிதல், அடிக்கடி கை கழுவுதல், தூரத்தை பராமரித்தல் மற்றும் சரியான இருமல் மற்றும் தும்மல் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுமாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.