நாட்டில் வரி இலக்கம் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு 50000 அபராதம்! முடிவில் திடீர் மாற்றம்
நாட்டில் வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா அபராதம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள போதிலும் அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி எண் பெறுவதை கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ,“நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அதனால் நாட்டு மக்களை ஒடுக்குவதற்கு எதிர்பார்க்கவில்லை.
“வரி இலக்கம் கட்டாயம் என்றாலும், அந்த மக்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல, தற்போது, மாதத்திற்கு 100,000 ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும்” என்றார்.