இலங்கை

முக்கியமான தருணம் வந்துவிட்டது : பகிரங்க அழைப்பு விடுத்த ரணில்

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பல இன மத அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வர வேண்டிய முக்கியமான தருணம் வந்துள்ளது. எனவே வாருங்கள் நாங்கள் ஒன்றுதிரண்டு புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரை நேற்று (07.02.2024) ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கை விளக்க உரையின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் முன்னேற்றம்
அவர் மேலும் தெரிவித்ததாவது, “2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை இருந்த நிலை, நம் அனைவருக்கும் நினைவில் இருக்கும். 2023 பெப்ரவரி மாதமளவில், இந்த நாட்டை ஒரு சிறந்த நிலைக்கு கொண்டு வர முடிந்தது.

இந்த வருடம் பெப்ரவரியாகும் போது கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தை விட சிறந்த நிலைக்கு நாடு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மற்றும் இந்த பெப்ரவரி வரையான நமது பொருளாதார குறிகாட்டிகள் சிலவற்றை நான் எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

கடந்த ஆண்டு பணவீக்கம் 50.06 சதவீதமாக இருந்தது. இன்று அது 6.4சதவீதமாக குறைந்துள்ளது. உணவுப் பணவீக்கம் 54.4 சதவீதமாக உள்ளது. இன்று அது 3.3 சதவீதமாக உள்ளது.

அன்று ஒரு டொலரின் பெறுமதி 363 ரூபாய். இன்று 314 ரூபாய். 2022 ஆம் ஆண்டின் இறுதியில், வரவு செலவுத் திட்ட முதன்மை பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7 சதவீதமாக இருந்தது. ஆனால் 2023 இல் முதன்மை வரவு – செலவுத் திட்டத்தில் உபரியை ஏற்படுத்த முடிந்தது.

இந்தச் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளில் பல தசாப்தங்களாக என்னை விமர்ச்சித்தவர்களே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உள்ளனர்.

நாட்டின் நன்மைக்காகவும், இளையோரின் எதிர்காலத்திற்காகவும் பொதுஜன பெரமுனவின் பெரும்பாளானவர்கள் பழைய பகையை மறந்துவிட்டு ஒன்றுபட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்கள் என்னுடன் பல காலமாக அரசியலில் ஈடுபட்டவர்கள். நான் அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர்களும் உள்ளனர்.

நாட்டுக்கான பொது பயணத்தில் இணைந்துகொள்ள பொதுஜன பெரமுனவால் முடியுமாயின் ஐக்கிய மக்கள் சக்தியால் அதனை செய்ய முடியாதிருப்பது ஏன்? மக்கள் விடுதலை முன்னணி நல்லாட்சி அரசின் காலத்தில் எம்முடன் நெருக்கமாக செயற்பட்டது. ஊழல் ஒழிப்பு பிரிவின் அலுவலகத்திற்கு ஆனந்த விஜயபாலவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.

அவ்வாறிருக்க நாட்டின் பொது முன்னேற்றத்திற்கான பயணத்தில் இணைய முடியாதிருப்பது ஏன்? இந்தச் சபையில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் என்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளன.

எனினும், நாட்டிற்காக இந்தக் கட்சிகளுக்கு பொதுப் பயணத்தில் ஏன் இணைந்துகொள்ள முடியாது. நாம் தேர்தலில் வெவ்வேறாக போட்டியிடுவோம். ஆனால் நாட்டின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் இணைந்துகொள்வோம். அதனால் நாட்டை முன்னேற்ற பொது நிலைப்பாட்டுடன் – பொதுவான எண்ணத்துடன் ஒன்றுபட முன்வாருங்கள் என மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்.

மாற்றத்தை எம்மிலிருந்து ஆரம்பிப்போம். எமது மனங்களைத் திருத்திக்கொள்வோம். எமக்கு நாமே ஒளியாவோம். நாம் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம். தனிப்பட்ட நோக்கங்களுக்காக அன்றி நாட்டின் பொதுக் கனவை நனவாக்க ஒன்றுபடுவோம். அடுத்த சந்ததியின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்.

எம்மீது சாட்டப்பட்டிருக்கும் பொறுப்புக்களை நாம் நிறைவேற்றுவோம். பல்வேறு தனிப்பட்ட நோக்கங்களுக்காக, இந்த பொறுப்புக்களைப் புறக்கணித்தால் வரலாற்றில் நாம் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவோம்.

சுற்றுலாத்துறை
குறுகிய காலத்தில், சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். 2022 ஆம் ஆண்டில் நம் நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 194,495 ஆகும். 2023 இல் அந்த எண்ணிக்கையை 1,487,303 ஆக அதிகரிக்க முடிந்தது. இந்த ஆண்டு ஜனவரியில் 200,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.

மேலும், 2023இல் பல சாதகமான நகர்வுகளை முன்னெடுத்தோம். கோட்டா முறையில் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோக முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

தற்போது தொடர்ந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது.

மீனவர்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. வாகனங்கள் தவிர அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளும் இப்போது நீக்கப்பட்டுள்ளன. நாட்டுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.

மேலும், உற்பத்தித் தொழிற்துறைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களின் விநியோக வலையமைப்பில் எந்தத் தடையும் இல்லை. 2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவிகிதமாக சுருங்கியது.

2022 முதல், தொடர்ந்து 6 காலாண்டுகளில் எதிர்மறையாக இருந்தது. ஆனால் 2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 1.6 சதவீத வளர்ச்சியை எட்டினோம். நமது பொருளாதாரம் விண்கல் வேகத்தில் சரிந்தது.

ஆனால் தற்போது எமக்கு அதனை மாற்ற முடிந்துள்ளது. அதை மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்த்தியுள்ளோம். நாங்கள் வீ வடிவ மீட்பு அல்லது வீ வடிவ மீட்சியைப் பெற்று வருகிறோம். நாம் அடைந்த விசேடமான வெற்றியாக அதனைக் குறிப்பிடலாம்.

வீழ்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதார மீட்சி மிகவும் கடினமானது மற்றும் வேதனையானது. ஆனால் ஏனைய நாடுகளைப் போல நீண்ட கால சிரமங்கள் மற்றும் வலிகள் இல்லாமல் நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்க எம்மால் முடிந்தது.

அதனால் புதிய பயணத்தைத் தொடர்வோம். புதிய எதிர்காலத்தை, புதிய நாட்டை உருவாக்குவோம். வாருங்கள் ஒன்றுபட்டு நாம் புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்” என தெரிவித்துள்ளார்.

Back to top button