கட்சியின் முதல் கூட்டத்தில் வீடியோ காலில் பேசிய நடிகர் விஜய்.., அவர் போட்ட உத்தரவு என்ன?
கிராமத்தில் உள்ள 80 வயது உள்ளவர்களுக்கும் நம் கட்சி பெயர் தெரிய வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிக்கை வெளியிட்டார். குறிப்பாக அவர் தனது அறிக்கையில், “வரும் 2026 சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு” என்று கூறியுள்ளார். கட்சி தொடங்கிய பின்பு முதல் கூட்டம் நேற்று பனையூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாது, கேரளாவில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்த கட்சி கூட்டத்தை புஸ்ஸி ஆனந்த் ஒருங்கிணைத்துள்ளார். நடிகர் விஜய் கட்சி கூட்டத்தில் நேரிடையாக கலந்து கொள்ளாமல் வீடியோ கால் மூலமாக 5 நிமிடம் நிர்வாகிகளிடம் உரையாடினார். அப்போது அவர், “பொது மக்களுடைய பிரச்சனையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எதிர்வரும் பிரச்சனைகளை நாம் புன்னகையோடு எதிர்கொள்ள வேண்டும். இடையூறுகளும், விமர்சனங்களும் வந்தால் இன்முகத்தோடு கடந்து செல்லுங்கள். 2024 -ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சி பணி தீவிரமடையும். குக்கிராமங்களில் உள்ள 80 வயது உள்ளவர்களுக்கும் நமது கட்சியின் பெயர் தெரிய வேண்டும்” என்று கூறியுள்ளார்.