கழிவறைக்கு டிஷ்யூ பேப்பருடன் செல்லும் டுவிட்டர் பணியாளர்கள்
கடந்த அக்டோபரில், உலகின் மிக பிரபல சமூக ஊடகமான டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரானார் மஸ்க். டுவிட்டர் நிறுவனத்தில் பல சிக்கன நடவடிக்கைகளை மஸ்க் மேற்கொண்டு வருகிறார்.
டுவிட்டர் நிறுவனத்தில் காவல் பணி மற்றும் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் யாரும் ஈடுபடாத நிலையில், அழுக்கடைந்த கழிவறைகள், தூய்மையற்ற பணி சூழல் காணப்படுகிறது. சான்பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் பணியாளர்கள் உள்ளிட்டோர் சாப்பிட்டு விட்டு, கீழே போடும் குப்பைகள், மீதமுள்ள உணவுகள் மற்றும் வியர்வை நாற்றம் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது என்று பிரபல செய்தி நிறுவனமான தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
டுவிட்டரில் சிக்கன நடவடிக்கை எதிரொலியாக, நிறுவன பணியாளர்கள் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்லும்போது, தங்களுடன் கழிவறைக்கு செல்வதற்கு தேவையான டிஷ்யூ பேப்பரையும் உடன் கொண்டு செல்கின்றனர் என தகவல் வெளிவந்துள்ளது. 300 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பட்ஜெட் பற்றாக்குறையை தவிர்க்கவே இந்த சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று மஸ்க் தெரிவித்து உள்ளார்.