8 வயதில் துறவறம் பூண்ட கோடீஸ்வர சிறுமி -குஜராத்தில் பிரமாண்ட ஊர்வலம்!
சங்வி அன்ட் சன்ஸ் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் வைர நகைகள் தயாரிக்கும் பிரபல நிறுவனங்களில் ஒன்று. மோகன் சங்வி என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் பல்வேறு கிளைகள் உள்ளன.
மோகன் சங்வியின் மகனான தனேஷ்சங்விக்கு 8 வயது தேவன்ஷி சங்வி, 5 வயதில் காவ்யா என்ற 2 மகள்கள் உள்ளனர். ஆண்டுக்கு பல நூறு கோடி வியாபாரம் செய்யும் கோடீஸ்வர நிறுவனத்தில் பிறந்தாலும் தனேஷ்சங்வியின் குடும்பத்தினர் மத வழிகாட்டுதலின்படி எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றி வந்திருக்கிறார்கள்.
குறிப்பாக தேவன்ஷி சங்வி தனது சிறுவயதில் இருந்தே தினமும் 3 முறை பிரார்த்தனை செய்வதை வழக்காக பின்பற்றி வரும் தற்போது 8 வயதாகும் அந்த தேவன்ஷி தேவன்ஷி சங்வி இன்று துறவறம் பூணுகிறார் என்று கூறப்படுகிறது . இதையொட்டி நேற்றைய தினம் அவரது குடும்பத்தினர் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தினர்.
இதில் யானைகள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்களுடன் பிரமாண்ட ஊர்வலம் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அவரது குடும்ப நண்பர் ஒருவர் கூறும்போது : 8 வயது தேவன்ஷி சங்வி ஒரு போதும் டி.வி. அல்லது திரைப்படங்களை பார்த்ததில்லை.
உணவகங்களுக்கு சென்றதில்லை. மேலும் எந்த ஒரு திருமண நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதில்லை. அவர் இதுவரை 367 தீட்சை நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்றுள்ளார். இது அவரை சிறுவயதிலேயே துறவற பாதையை தேர்ந்தெடுக்க உதவியது.
தேவன்ஷி தனது 2 வயதிலேயே உண்ணாவிரதம் இருந்து துறவற பாதையில் செல்வதில் உறுதியாக இருந்தார் என்றார். தேவன்ஷி சங்வி தீட்சைக்கு தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அவர் துறவிகளுடன் 600 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார்.
மேலும் பல்வேறு கடினமான நடைமுறைகளுக்கு பிறகு அவர் தனது குருவால் துறவறம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார். நேற்று நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு முன்னதாகவே பெல்ஜியத்திலும் இதே போன்ற ஒரு பிரமாண்ட ஊர்வலத்தை அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடிடத்தக்கது.