பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது!
குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் செங்கல்பட்டு மாவட்டம் செந்நேரி கிராமத்தை சேர்ந்த பாம்புபிடி வீரர்களான இருளர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவர்கள் இருவரும் மிகவும் அபாயகரமான விஷப்பாம்புகளை பிடிப்பதில் வல்லவர்கள் ஆவர். மேலும், பாம்புகளை பிடிப்பதற்கு சர்வதேச அளவில் பயிற்சி அளித்து வருகின்றனர்.
மேலும், அமெரிக்காவின் புளோரிடாவில் மலைப்பாம்புகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பிரபல வன உயிரின நிபுணர் ரோமுலஸ் விட்டேர்கர் தலைமையிலான குழுவில் மாசி சடையன், வடிவேல் கோபால் ஆகியோரும் இடம் பெற்று இருந்தனர்.
மேலும் பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் இருவரும் விஷ மருந்துகள் கண்டறிவதிலும் பங்காற்றி வருகிறார்கள்.
பாம்புகளிடம் இருந்து விஷ எதிர்ப்பு மருந்துகளை சேகரிப்பதன் மூலம் இந்திய மருத்துவத் துறைக்கும் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்.
இதேபோல் பிரபல பரதநாட்டிய கலைஞர் கல்யாண சுந்தரம் பிள்ளை, நூலகரும் சமூக சேவகருமான பாலம் கல்யாண சுந்தரம், பாளையங்கோட்டையை சேர்ந்த கோபால் சாமி, வேலுச்சாமி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷண் விருது அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.