சுவாசிக்க காற்றுக்கு ரூ.2,500… தாய்லாந்தின் தற்போதைய நிலைமை!
தற்போது உலகளாவிய ரீதியில் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலை வந்துவிட்டது, அடுத்தது காற்றையும் காசு கொடுத்து வாங்கும் சூழல் உருவாகும் என்று சூழலியல் ஆர்வலர்கள் பலர்எச்சரித்திருந்தார்கள் . அவ்வாறே தூய்மையான காற்றை சுவாசிக்க விலை நிர்ணயம் செய்துள்ளார் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டுசிட் கசாய் என்ற விவசாயி .
தாய்லாந்தில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தாய்லாந்தில், தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களால் வெளிவரும் நச்சுப் புகைகள் மற்றும் விவசாயக் கழிவுகளை எரிப்பதன் மூலம் வெளியாகும் புகைகளால் காற்று கடுமையான மாசுக்கு உள்ளாகிறது .
காற்று மாசு, தாய்லாந்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே மாறியுள்ளது. அந்நாட்டில் அதிகமான மக்கள் சுவாசிக்க தூய்மையான காற்றைத் தேடி அலைகின்ற நிலைமை தற்போது நிலவி வருகிறது.
இந்நிலையில், தாய்லாந்தில் விவசாயம் செய்து வரும் 52 வயது நிரம்பிய டுவிட் கசாய் என்பவர் தனது பண்ணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் தூய்மையான காற்றை சுவாசிக்க, இந்திய மதிப்பில் 2,500 ரூபாய் கட்டணமாக வசூலித்து வருவகிறாராம் .
இது பாருக்கு வியப்பூட்டும் விதமாக உள்ளது. அங்கு வருபவர்களுக்கு, உணவு இலவசமாக வழங்கப்பட்டாலும் முதல் ஒரு மணி நேரத்துக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க 2,500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இது தொடர்பாக தாய்லாந்தின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த விவசாயி டுசிட் கசாய், “என்னைப் பொறுத்தவரை, என் பண்ணையில் தூய்மையான காற்று கிடைக்கும். மாசு இல்லாத, தூய்மையான காற்றை சுவாசிக்க விரும்புவோருக்கு இந்த இடம் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. எனது பண்ணைக்கு அதிக அளவில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வருகை தருகின்றனர். அவர்களிடம் நான் கட்டணம் வசூலிப்பதில்லை. இயற்கையை சிதைப்பவர்கள், இங்கே வருகை தர வேண்டாம் என்பதே எனது கோரிக்கை” என்று கூறியுள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாக்க குழு ஒன்றையும் தொடங்கியுள்ளாராம் டுசிட் கசாய்.