இலங்கை

North Sea நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை

நோத்சீ எனப்படும் வடகடல் நிறுவனத்திற்கான புதிய அலுவலகம் இன்று (18) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிறுவனத்திற்கான புதிய தலைவர் மற்றும் பொது முகாமையாளர் ஆகியோர் நியமிக்கப்பட்ட நிலையில், நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்தும் நோக்குடன் புதிய அலுவலகம் கடற்றொழில் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “இன்று இந்த நிகழ்ச்சிகள் சிறந்த ஆரம்பமாக இருக்கும் என நம்புகிறேன். பொதுவாக பல அரச நிறுவனம் நீண்டகாலமாக நஷ்டத்தில் இயங்குகின்றமையால் அரசாங்கம் அவற்றை விசேடமான கண்காணிப்பில் செயற்படுத்துவதற்கு முடிவெடுத்திருக்கிறது. இது உண்மையில் நிறுவனத்திற்கு தலைமைதாங்குபவர்கள் அவர்களின் அரசியல் பிரதிநிதிகள்தான் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும். இங்கு இந்த நிறுவனத்தையும் தனியார் மயப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசாங்கத்தில் முக்கியமான அமைச்சராக இருந்தாலும் அதில் எனக்கு இணக்கப்பாடு கிடையாது. அரசாங்கத்தின் கொள்கைகளையும் பணியாற்றும் ஊழியர்களையும் தனியாரையும் இணைத்து அமைச்சின் கண்காணிப்பின்கீழ் முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. இன்றிலிருந்து இந்த நிறுவனத்தை தலைவர் மற்றும் அதிகாரிகள் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வார்கள் என நம்புகிறேன். இந்த நிகழ்வில் இரு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன. அவர்களிடம் தேவையான மூலப்பொருட்களை கடனாக வழங்குமாறும் நான் கேட்டுக்கொண்டுள்ளேன். அவர்களும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அதேபோன்று, இந்திய அரசாங்கத்தின் கடனுதவிகள் ஊடாக 160 மில்லியன் ரூபாய் கடனாக கோரியிருக்கிறோம். உதவிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அண்மையில் சீன நிறுவனம் ஒன்றுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது கடற்றொழிலாளர்களுக்கு 500 மில் ரூபாவை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த நிதியுதவிகளைக் கொண்டு, நோர்த் சீ (வடகடல்) நிறுவனம் எந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதோ அதனை அடையக்கூடியதாக இருக்கும் என நம்புகிறேன். இன்றைய தினம் இராஜாங்க அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் வேறு வேலைகள் இருந்ததன் காரணமாக அவர்களால் இந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் அவர்களின் ஆசீர்வாதத்துடனும் முழு ஒத்துழைப்புடனும் இதனை முன்னெடுத்துச் செல்ல முடியும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Back to top button