இலங்கை

யாழில் வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல்! மூவருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாண மாவட்டம் – புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன் வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மூவரையும் மே மாதம் 3ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பங்குனி திங்கள் தினமான கடந்த 10ஆம் திகதி புத்தூர் சந்தியில் தண்ணீர் பந்தல் அமைத்த இளைஞர்கள் ஒலி பெருக்கியை அதிக சத்தத்தில் ஒலிக்க விட்டுள்ளனர். இதனையடுத்து தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றிருந்த வைத்தியர் ஒலி பெருக்கியின் சத்தத்தை குறைக்கும்படி கேட்டுள்ளார். பின்னர் வைத்தியசாலைக்குள் நுழைந்த சிலர் தாக்குதல் நடத்தியதுடன் வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தலும் விடுத்திருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக வைத்தியர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியிருந்தபோதும் பொலிஸார் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. இதனால் வைத்திய சேவைகளை நிறுத்தப்போவதாக புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்தினர் அறிவித்திருந்தனர்.

மேலும், மருத்துவ சங்கம், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் ஆகியனவும் இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தன. கடும் அழுத்தங்களின் பின்னரே சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மூன்று சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.

Back to top button