இந்தியா

இருமல் மருந்தில் நச்சு காரணமாக QP Pharmachem நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்த இந்தியா!

இந்திய அரசு, இருமல் மருந்தின் தரம் குறைவாக இருப்பதாக கூறி, QP Pharmachem நிறுவனத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தும், அதன் ஏற்றுமதியை இடைநிறுத்தியும் உத்தரவிட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் மாஷால் தீவுகள் மற்றும் மைக்ரோனேசியாவில் பயன்படுத்தப்பட்ட இருமல் மருந்துகளில் மாசுபாடு இருப்பதை கண்டறிந்தது. அதன்படி, மருந்து தயாரிப்பாளரின் உற்பத்தி உரிமத்தை இடைநீக்கம் செய்வதாக நாடாளுமன்றத்தில் இந்திய அரசு அறிக்கை வெளியிட்டது. கடந்த ஆண்டு காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்தால் குறைந்தது 89 குழந்தைகள் இறந்தததையடுத்து, இந்திய கட்டுப்பாட்டாளர்கள் மருந்து தயாரிப்பாளர்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், இந்தியாவில் உள்ள வடக்கு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த QP Pharmachem லிமிடெட் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தின் ஒரு தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், உயிருக்கு ஆபத்தானதாகக் கருதப்படும் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு இருந்ததாக WHO கண்டறிந்தது. இந்நிலையில், QP Pharmachem நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதிர் பதக்,”இடைநீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக” தெரிவித்துள்ளார். இருமல் மருந்து / cough syrup மேலும், குயீபெனெசின் டிஜி என்று பெயரிடப்பட்ட இருமல் மருந்தில் பயன்படுத்தப்படும் பொருட்களை, அதன் உற்பத்தியைத் தொடங்குவதற்கு முன்பு சோதனை செய்ததாக பதக் கூறினார். அவர் கம்போடியாவிற்கு மட்டுமே தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததாகவும், அது மஷால் தீவுகள் மற்றும் மைக்ரோனேஷியாவை எவ்வாறு சென்றடைந்தது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதனிடையே, துணை சுகாதார அமைச்சர் பாரதி பிரவின் நாடாளுமன்றத்தில் கூறுகையில், “QP Pharmachem நிறுவனத்தின் உற்பத்தி வளாகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மருந்து மாதிரிகள் தரமானதாக இல்லை” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே, 89 குழந்தைகளின் உயிரிழப்பிற்கு தொடர்புடைய Maiden Pharmaceuticals மற்றும் Marion Biotech நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், எந்த தவறும் செய்யவில்லை என்று நிறுவனங்கள் மறுத்துள்ளன.

இந்நிலையில், ஜூன் மாதம் முதல் இருமல் மருந்து ஏற்றுமதிக்கான சோதனையை இந்தியா கடுமையாக்கியுள்ளது, தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கு முன் நிறுவனங்கள் அரசு ஆய்வகத்திலிருந்து பகுப்பாய்வுச் சான்றிதழைப் பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Back to top button