இலங்கை

இன நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் முயற்சி: திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை மொறவெவ பகுதியில் இன நல்லுறவினை கெடுக்கும் நோக்குடன் இனம் தெரியாதோரால் பன்குளம் 4ம் கண்டம் பிரதான வீதியின் அருகில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் இன்று (10.09.2023) காலை அப்பகுதி மக்கள் இது பற்றி மொரவெவ- பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்ததை அடுத்து மொறவெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குறித்த இடத்தில் புத்தர் சிலை மற்றும் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில் கிராம மக்களினால் குறித்த இடத்தில் இரு சிலைகளும் தேவை இல்லை என அகற்றப்பட்டது.

இருந்த போதிலும் இன்றைய தினம் குறித்த இடத்தில் அடையாளம் தெரியாதோரினால் பிள்ளையார் சிலை மாத்திரம் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன முருகலை ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்ட வேலையென அப்பகுதியில் உள்ள மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உடனடியாக குறித்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையார் சிலையை அகற்றுமாறும் அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை குறித்த பகுதியில் தமிழ் சிங்கள இனத்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இக்கால கட்டத்தில் இவ்வாறான செயற்பாட்டின் மூலம் இன நல்லுறவை சீர்குலைக்கும் விதத்தில் அமையப் பெற்றுள்ளதாகவும் குறித்த இடத்தில் புத்தர் சிலையோ, பிள்ளையார் சிலையோ தேவை இல்லை எனவும் அப்பகுதியில் உள்ள மக்கள் குறிப்பிடுகின்றனர்.

Back to top button