உலகச் செய்திகள்

114 நாள் தேடுதலுக்கு பின் டைட்டன் நீர்மூழ்கி விபத்து குறித்து வெளியான பரபரப்புத் தகவல்!

அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிப் போன டைட்டன் நீர்மூழ்கியின் சிதைவுகள் 114 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடலின் அடியாழத்தில் மூழ்கிக் கிடக்கும் பிரபலமான டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை நேரில் காண்பதற்காக, அந்த நீர்மூழ்கியில் சுற்றுலா சென்ற 5 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்துவிட்டனர்.

கடந்த ஜூன் 18-ம் திகதி அட்லாண்டிக் பெருங்கடலில் விபத்து நேரிட்டது முதலே நீர்மூழ்கியை கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் பயனாக 114 நாட்களுக்குப் பிறகு தற்போது நீர்மூழ்கியின் சில பாகங்களும், மனிதனின் உடல் சிதைவுகளும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காகப் புறப்பட்டுச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி உள்ளுக்குள்ளேயே வெடித்து சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்துள்ளது.

டைட்டன் நீர்மூழ்கியின் உட்புறத்தில் ஓர் அழிவுகரமான வெடிப்பு நடந்து அது உடைந்துவிட்டதாக அமெரிக்க கடலோரப்படை கூறுகிறது. இந்த நிலையில் அமெரிக்கா, கனடா, பிரெஞ்சு நாடுகளின் குழுக்கள் கடந்த ஐந்து நாட்களாக பெரிய அளவிலான தேடல், மீட்புப் பணிகளை மேற்கொண்டு வந்தன.

வியாழக்கிழமை மாலை அமெரிக்கக் கடலோரப்படை, டைட்டானிக் தளத்தைச் சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் டைட்டனின் ஐந்து பெரிய துண்டுகளை கண்டுபிடித்ததாகக் கூறியது.

இது நீர்மூழ்கியின் அழுத்த அறை வெடித்திருப்பதைக் காட்டுவதாகக் கூறியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள கடலோரப்படை, அவர்களின் உடல்கள் எப்போதாவது மீட்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று கூறியது.
ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் (ROVs) தளத்தில் இருக்கும் என்றாலும், அடுத்த 24 மணிநேரத்தில் தேடுதல் பணி படிப்படியாக நிறுத்தப்படுகிறது. அமெரிக்கக் கடலோரப்படையின் செய்தியாளர் சந்திப்பிற்கு முன்னதாக, டைட்டனை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டது.

“எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத், ஹமிஷ் ஹார்டிங் மற்றும் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோரை துரதிர்ஷ்டவசமாக இழந்துவிட்டோம் என்று நாங்கள் இப்போது நம்புகிறோம்” என்று நீர்மூழ்கியை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“இந்த மனிதர்கள் உண்மையான ஆய்வாளர்கள், அவர்கள் தனித்துவமான சாகச உணர்வையும், உலகின் கடல்களை ஆராய்வதற்கும் பாதுகாப்பதற்கும் ஆழ்ந்த ஆர்வத்தையும் கொண்டவர்கள். இந்த துயரமான நேரத்தில் எங்கள் இதயங்கள் இந்த ஐந்து ஆன்மாக்களுடனும் அவர்களது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருடனும் உள்ளன.

அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மீட்புப் பணியில் மிகவும் கடினமாக உழைத்த சர்வதேச சமூகத்தின் பல அமைப்புகளைச் சேர்ந்த எண்ணற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் முழு OceanGate குடும்பமும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர்மூழ்கியில் பயணித்தவர்கள் யார்?
காணாமல் போன நீர்மூழ்கியில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் இருந்தனர்.

ஹாமிஷ் ஹார்டிங் – 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். சாகசப் பிரியரான இவர் விண்வெளிப் பயணத்துடன், பல முறை புவியின் தென் முனைக்கும் சென்று திரும்பியுள்ளார்.
ஷாஸாதா தாவூத் – 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர்.

சுலேமான் தாவூத் – ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர்

பவுல் ஹென்றி நர்கோலெட் – 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் ‘டைவர்’ பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு.

ஸ்டாக்டன் ரஷ் – 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி.

5 பேரின் உடல்கள் மீட்கப்படுமா?
டைட்டன் நீர்மூழ்கி மூழ்கிப் போன தகவல் உறுதியானதுமே, அதில் பயணித்து உயிரிழந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்படுமா என்பதே அடுத்த கேள்வியாக முன் நின்றது.

இதுகுறித்து அமெரிக்க கடரோர காவல்படையிடம் செய்தியாளர்கள் கேள்வியை முன்வைத்தனர்.

அதற்குப் பதிலளித்த அமெரிக்க கடலோர காவல்படை, “ஆழ்கடலில் நீருக்கடியில் தரைப்பரப்பு மிகவும் சிக்கலாக இருக்கிறது” என்று பதிலளித்தது.

ஆழ்கடலில் டைட்டன் நீர்மூழ்கியின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் அழுத்தம் மிக அதிகமாக இருப்பதால் 5 பேரின் உடல்களை மீட்பது சாத்தியமில்லை என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

தடய மரபணுவியல் துறை பேராசிரியர் டென்னிஸ் கோர்ட் கூறுகையில், “ஆழ்கடலில் டைட்டன் நீர்மூழ்கி வெடித்த இடத்திற்கு உடனே சென்று உடல்களை அப்புறப்படுத்துவது என்பது மிகவும் சிக்கலான விஷயம்” என்கிறார்.

மிக அதிக அழுத்தம் காரணமாக சிறிய நீர்மூழ்கிக் கப்பல் சுருங்கி வெடித்திருப்பதால், அதில் பயணித்து இறந்தவர்களின் உடல்களை அங்கிருந்து கொண்டு வர முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை என்று அவர் கூறுகிறார்.

பாகங்கள் எப்படிக் கிடைத்தன?
முன்னதாக டைட்டானிக் அருகே தேடுதல் பணி நடைபெறும் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் ஆர்.ஓ.வி வாகனம் சில குப்பைகளைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்தது.

நீர்மூழ்கியின் தரையிறங்கும் சட்டகம், பின் பக்க உறை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. இடிபாடுகளில் கிடைத்தவற்றில் “ஒரு தரையிறங்கும் சட்டகம் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஒரு பின்புற உறை” ஆகியவை அடங்கும் என்று பயணிகளின் நண்பரான டேவிட் மியர்ன்ஸிடமிருந்து தகவல் வந்தது.

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் பணியாளர்கள், கடலின் மேற்புரத்தில் அதனோடு தொடர்பில் இருந்த கப்பலான போலார் பிரின்ஸ் உடன் இருந்த தொடர்பை இழந்தனர்.

இந்தத் தொடர்பு முறிவு, டைட்டன் கடலுக்குள் சென்ற ஒரு மணிநேரம் 45 நிமிடங்களில் நிகழ்ந்தது. டைட்டானிக் கப்பலின் இடிபாடுகள் கனடாவின் நியூஃபவுண்ட்லேண்டில் உள்ள செயின்ட் ஜான்ஸின் தெற்கே 700கிமீ தொலைவில் உள்ளது.

டைட்டானிக் கப்பலின் சிதைவுகளுக்கு அருகே உள்ள கடல் பரப்பில் இந்தக் குப்பைகளை ஹொரைசான் ஆர்டிக்கின் ஆர்.ஓ.வி வாகனம் கண்டுபிடித்துள்ளதாக கடலோர காவல்படை அறிக்கை வெளியிட்டுள்ளது.

டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி எங்கே காணாமல் போனது?
காணாமல் போன டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி 5 பேருடன் நியூபவுண்ட்லாந்து கடற்கரையில் செயின்ட் ஜான்ஸ் நகரில் தொடங்கியுள்ளது.

பயணத்தை தொடங்கிய ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் அந்த நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

அது செயின்ட் ஜான்ஸ் நகரில் இருந்து கிழக்கே 1,450 கி.மீ., தெற்கே 643 கி.மீ. தொலைவில் தொலைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டிய நிபுணர் பணிநீக்கம்
காணாமல் போன நீர்மூழ்கியில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டிய டேவிட் லாக்ரிட்ஜ் என்ற நிபுணரை 2018ஆம் ஆண்டில் ஓஷன்கேட் நிறுவனம் பணிநீக்கம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

வாய்மொழியாக அவர் கூறிய விஷயங்களை உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் முறைப்படி அறிக்கையாகத் தயார் செய்து ஆய்வுக்கு முன்வைத்துவிட்டார்.

இதற்குப் பரிசாக, அவரை பணிநீக்கம் செய்ததுடன், கம்பெனி ரகசியங்களை கசியவிட்டதாக வழக்கும் தொடர்ந்தது. அந்த வழக்கில் இரு தரப்பும் பின்னர் சமரசம் செய்து கொண்டன.

‘டைட்டன்’ நீர்மூழ்கி பற்றி நீதிமன்ற ஆவணங்கள் என்ன சொல்கின்றன?
ஓஷன்கேட் நிறுவனம் – நிபுணர் டேவிட் லாக்ரிட்ஜ் இடையிலான வழக்கில் நீதிமன்ற ஆவணங்களில் டேவிட் லாக்ரிட்ஜ் கண்டுபிடித்த பாதுகாப்புக் குறைபாடுகளாக சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதில் முக்கியமானது, தற்போது காணாமல் போயுள்ள டைட்டன் நீர்மூழ்கியின் முன்பக்க காட்சிப் பகுதி 4,265 அடி ஆழம் வரையே செல்ல சான்றளிக்கப்பட்டது.

ஆனால், 12,500 அடி ஆழத்தில் கிடக்கும் டைட்டானிக் சிதைவுகளை நேரில் பார்க்க இந்த நீர்மூழ்கியில் தான் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

அது தற்போது காணாமல் போயிருப்பது குறித்து டேவிட்டின் கருத்தை அறிய பிபிசி முயன்றது. ஆனால், அவர் பதிலளிக்க விரும்பவில்லை. அவர் பாதுகாப்புக் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டிய அதே நீர்மூழ்கிதான், அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டாக்டன் ரஷ்ஷூடன் காணாமல் போயுள்ளது.

‘டைட்டன்’ நீர்மூழ்கி பற்றி ஓஷன் கேட் நிறுவனம் கூறுவது என்ன?
ஓஷன்கேட் நிறுவனம் ஆழ்கடலில் சுற்றுலாவுக்கென மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களை சொந்தமாக வைத்துள்ளது. அவற்றில் ‘டைட்டன்’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் மட்டுமே, கடலில் 13 ஆயிரம் அடி ஆழம் வரை செல்லக்கூடியது.

இந்த நீர்மூழ்கிக் கப்பல் மிகவும் அதிநவீன முறையில், பாதுகாப்பானதாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்று ஓஷன்கேட் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

‘டைட்டன்’ நீர்மூழ்கியின் முதலிரு பயணங்கள் வெற்றி
2021, 2022 ஆகிய ஆண்டுகளில் ‘டைட்டானிக் கப்பல்’ மூழ்கியுள்ள பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள ‘டைட்டன்’ நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏற்கனவே இரண்டுமுறை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த பயணங்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து, தற்போது 2023ஆம் ஆண்டு ‘டைட்டானிக் கப்பலை’ பார்வையிடுவதற்கான அடுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.” என ஓஷன்கேட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

‘டைட்டன்’ நீர்மூழ்கியின் செயல்திறன் என்ன?
10,432 கிலோகிராம் எடையும், 22 அடி நீளமும் கொண்ட டைட்டன் நீர்மூழ்கியால் 13,100 அடியாழம் வரை செல்ல முடியும், அதில் 5 பேருக்கு 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் என்று ஓஷன்கேட் இணையதளம் கூறுகிறது.

ஆழ்கடலில் டைட்டானிக் மூழ்கியுள்ள இடத்திற்குச் சென்று திரும்பி வர 8 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.

டைட்டானிக் சுற்றுலா – 8 நாள் பயணத் திட்டம் ஆழ்கடலில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்கும் இந்த சுற்றுலா 8 நாட்கள் கொண்டது. அதற்கு கட்டணமாக ஒருவருக்கு இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

ஆழ்கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கிடக்கும் இடத்திற்கு போலார் பிரின்ஸ் என்ற கப்பலில் இந்த நீர்மூழ்கிகள் கொண்டுவரப்படும்.

Back to top button