அமெரிக்க அதிபர், ஜப்பான் பிரதமர் விரைவில் சந்திப்பு
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த 1-ஆம் தேதி ஜப்பானை நோக்கி குறுகிய தூர பாலிஸ்டிக் ரக ஏவுகணையை ஏவி சோதித்தது வடகொரியா. இதனை தொடர்ந்து நடந்த ஆளும் தொழிலாளர் கட்சியின் கூட்டத்தில் பேசிய வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், நாட்டின் அணு ஆயுத உற்பத்தியை அதிவேகத்தில் அதிகரிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் பைடனை வெள்ளை மாளிகையில் வைத்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா வரும் 13-ஆம் தேதி நேரில் சந்தித்து பேச உள்ளார்.
இந்த சந்திப்பில் இரு தலைவர்களும், சர்வதேச அளவில் நிலவி வரும் பருவநிலை மாற்றம், வடகொரியா, சீனாவை சுற்றி நிலவும் பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்கள், உக்ரைன் மீது படையெடுத்து உள்ள ரஷியா உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை நடத்த உள்ளனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.