பாகிஸ்தானில் சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு
பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் அரசாங்கம் அதன் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்கத் தவறிவிட்டது. பாகிஸ்தான் நாட்டு மக்கள் தினசரி வாழ்வில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
சமையலுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர் உற்பத்தி போதிய அளவு இல்லாததால் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கியாஸ் சிலிண்டரின் விலையும் அதிகரித்து விட்டது. அந்த நாட்டு மக்கள் சிலிண்டர்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பைகளில் கியாஸ் நிரப்பி செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கைபர் பக்துங்வா மாகாணத்தில் மக்கள் இவ்வாறு பிளாஸ்டிக் பைகளில் கியாஸ் நிரப்பி செல்லும் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வருகிறது.
பிளாஸ்டிக் பைகளில் கியாஸ் நிரப்பி செல்வது கையில் வெடிகுண்டு எடுத்து செல்வதற்கு சமம் என்றும், இதனால் மிகவும் மோசமான விபத்துகள் நிகழும் அபாயம் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.