பெருவில் அரசுக்கு எதிராக போராட்டம்: மூடப்பட்டஉலக அதிசயமான ‘மச்சு பிச்சு’ நகரம்!
தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டில்லோ பாராளுமன்றத்தை கலைத்து அவசர நிலையை கொண்டு வர திட்டமிட்ட நிலையில் அவரை எம்.பி.க்கள் தீர்மானம் நிறைவேற்றி பதவி நீக்கம் செய்தார்கள்.
மேலும் கிளர்ச்சி மற்றும் சதித்திட்டம் தீட்டியதாக கூறி கைது செய்யப்பட்டார்பெட்ரோ காஸ்டில்லோ. புதிய அதிபராக பெண் தலைவர் டினா பொலுவார்டே பதவி ஏற்றார். இதையடுத்து பெட்ரோ காஸ்டிலோ ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இதில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது.
தலைநகர் லிமாலில் நடந்த பேரணியில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் , அவசர நிலை பிறப்பிக்கப்பட்டாலும் போராட்டத்தை ஒடுக்க முடியவில்லை. இந்த நிலையில் பெருவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான மச்சுபிச்சு நகரை அந்நாட்டு அரசு மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு நாட்டில் நிலவும் தொடர் போராட்டம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 15-ம் நூற்றாண்டு இன்கா பேரரசால் மலைமீது கட்டப்பட்ட பழம்பெருமை வாய்ந்த நகரமான மச்சு பிச்சுவுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
தற்போது மச்சு பிச்சு நகரில் சுமார் 300-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா அமைச்சருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.