உலகச் செய்திகள்

நியூசிலாந்து மக்களின் தாயாக சகோதரியாக இருக்க தயார் : யார் இந்த ஜெசின்டா ஆர்டன்?!

நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டன் பதவியில் இருந்து விளக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்ததன் படி இன்று விடைபெற்றுள்ளார்.

இன்று தனது மௌரி இன மக்கள் மத்தியில் ஆற்றிய உரையில் நியூசிலாந்து மக்கள் தன்மீது செலுத்திய கருணை பச்சாதபம் குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நான் நியூசிலாந்து மக்களின் தாயாக சகோதரியாக இருப்பதற்கு தயார் என ஜெசின்டா ஆர்டென் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியின் இறுதி நாளான இன்று அவர் மயோரி இனத்தை சேர்ந்த பெரியவர்கள் அரசியல்வாதிகள் சகிதம் ரட்டன என்ற நகரிற்கு அவர் விஜயம் மேற்கொண்டார் அங்கு அவரை அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டனர்.

எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியத்தை அளித்தமைக்காக இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி என ஜெசிந்தா ஆர்டென் அங்கு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

மேலும் நான் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினராகவும் சகோதரியாகவும் தாயாகவும் விளங்குவதற்கு தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

யார் இந்த ஜெசின்டா ஆர்டன்?!

1980ஆம் ஆண்டு ஹேமில்டனில் பிறந்த ஜெசிந்தா, அவருடைய தந்தை காவல்துறை அதிகாரியாக இருந்தார். அவரது தாய் பள்ளிகளில் சமையலர் பணி செய்து வந்தார்.

தன்னுடைய குழந்தை பருவத்தை சிறு கிராமப்புற பகுதிகளில் கழித்தார். அவர் பார்த்து வளர்ந்த வறுமை, அவரது அரசியல் சிந்தாந்தத்தை வடிவமைத்தது. தனது 17 வயதில் தொழிலாளர் கட்சியின் ஆதரவாளரானார் ஜெசிந்தா.

அரசியல் மற்றும் பொது தொடர்புத் துறையில் பட்டம் பெற்ற அவர், அப்போதைய பிரதமர் ஹெலன் கிளர்க்கிடம் பணிபுரிய தொடங்கினார். 2006ல் பிரிட்டர் கேபினட் அலுவலகத்துக்காக பணிபுரிந்தார்.

பின்னர் 2008ஆம் ஆண்டு நியூசிலாந்து திரும்பிய அவர், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது குழந்தை வறுமை ஒழிப்பு, ஒருபாலினத்தவர்களின் உரிமைகள் தொடர்பான சட்ட மசோத்தக்களை ஆதரித்தார்.

2017ஆம் ஆண்டு நியூசிலாந்து தேர்தல் நடக்கவிருந்த ஏழு வாரங்களுக்கு முன்புதான் ஜெசிந்தா தொழிலாளர் கட்சியின் தலைவரானார். அப்போது அவர் வெற்றிபெற வாய்ப்பு குறைவு என்றே கூறப்பட்டது.

அவருக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், அந்நாட்டின் தேசியவாத கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தார் ஜெசிந்தா.

குழந்தை பெற்றெடுத்த ஆறு வாரங்களில் ஜெசிந்தா பணிக்கு திரும்பினார்.

“நான் ஒன்றும் ‘சூப்பர் உமன்’ அல்ல, என் கணவர் வீட்டில் இருந்து குழந்தையை பார்த்துக் கொள்வதால் மட்டுமே என்னால் பணியை பார்க்க முடிகிறது. நானும் சாதாரண பெண்தான். எனக்கு சூப்பர் உமன் போன்ற தோற்றம் தேவையில்லை. பெண்கள் எல்லாம் அப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது,” என்று 2018ஆம் ஆண்டு த ஃபினான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த ஜெசிந்தா தெரிவித்திருந்தார்.

2019ஆம் ஆண்டு கிரைஸ்ட்சர்ச் தீவிரவாத தாக்குதல் சம்பவம் நடந்தபோது அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

கொலையாளியின் பெயரைக்கூட வெளிப்படையாகக் கூற மறுத்த ஜெசிந்தா, அவர் நியூசிலாந்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும், அவரை அந்நாடு ஏற்காது என்றும் தெரிவித்தார்.

பின்னர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அந்நாட்டில் எரிமலைச் சீற்றம் சம்பவம் நிகழ, அதில் ஆஸ்திரேலியா, அமெரிக்க நாட்டினர் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். அப்போதும் ஜெசிந்தா தனது பொறுப்பை சரியாக செய்தார் என்று பாரட்டப்பட்டது.

கொரோனா பெருந்தொற்றை நியூசிலாந்து கையாண்ட விதத்திற்கு உலகளவில் ஜெசிந்தாவுக்கு பாராட்டுகள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button