உலகச் செய்திகள்

தாய்வான் ஆதரவு நாடுகளுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை!

தாய்வானை ஆதரிக்கும் நாடுகளுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சீனாவின் தாய்வான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள கருத்தில், “தாய்வான் விவகாரத்தில் தேசிய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் இப்போதும் சீனா உறுதியாக உள்ளது.

சீனாவுக்கு தீங்கிழைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் சில நாடுகள் தைவானுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. அந்த நாடுகள் நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தாய்வானுடன் இணைந்து அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றார். அதேபோல் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தற்போது தாய்வான் சென்றுள்ளது. இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாய்வான் , சீனா தனது நாட்டின் ஒரு பகுதி என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தாய்வானுக்கு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

சீனா – தாய்வான் முறுகல் நிலைக்கான அடிப்படை காரணம் என்ன?

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான காலகட்டத்தில் சீனாவின் சியாங் காய்-ஷேக்கின் குமிண்டாங் அரசுக்கும், மா சேதுங்கின் கம்யூனிஸ்ட் படைக்கும் இடையேயான போர் உக்கிரமடைந்தது.

போரின் முடிவில், சீனாவின் பெரும்பகுதியைக் சீன கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றி 1949-ம் ஆண்டு பீஜிங்கை தலைநகராகக்கொண்டு, `மக்கள் சீனக் குடியரசு’ எனும் பெயரில் புதிய நாட்டை அறிவித்தது.

அதேசமயம் கம்யூனிஸ்ட் படையால் விரட்டியடிக்கப்பட்ட சியாங் காய்-ஷேக்கின் அரசாங்கத்தினர், 15 லட்சம் மக்களுடன் தாய்வான் நாட்டுக்குத் தப்பிச் சென்றனர். அங்கு, சீனக் குடியரசு ' எனும் பெயரில் அரசாங்கத்தை நிறுவி,நாங்கள்தான் சட்டப்படி அமைந்த முழுமையான சீன அரசாங்கம்’ என பிரகடனப்படுத்தினர்.

ஐக்கிய நாடுகள் சபையும், பெரும்பாலான உலக நாடுகளும் 1970-ம் ஆண்டுவரை சியாங்கின் அரசையே சீன அரசாக அங்கீகரித்தன.

முடிவை மாற்றிய ஐ.நா!

ஆனால், 1971-ம் ஆண்டு ஐ.நா சபை பீஜிங்கைத் தலைநகராகக்கொண்டு இயங்கும் மக்கள் சீன அரசுக்குத் தனது அங்கீகாரத்தை மாற்றியது. இதனால், சீனாவின் மற்ற பகுதிகளையும் மக்கள் சீனக் குடியரசு தன்னுடன் இணைத்துக்கொண்டது.

ஐ.நா-வால் வெளியேற்றப்பட்டு, தனித்துவிடப்பட்ட குமிண்டாங் சீனக் குடியரசு, தன்னைத் தனிநாடாக அறிவித்துக்கொண்டு தாய்வானாகவே தொடர்ந்தது. தாய்வான் தீவு முழுமையும் சீன அரசுக்குச் சொந்தமானது என அதிகாரக்குரல் எழுப்பியது. ஆனால், தாய்வான் இதை முற்றிலுமாக மறுத்தது.

அதன் பின்னர் 1981-ம் ஆண்டு சீன அரசாங்கம், `ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்’ என்ற புதிய ஆட்சிமுறைத் திட்டத்தைக் கொண்டுவந்து, “தாய்வான் சீனாவுடன் இணைந்தால், ஹாங்காங்கில் இருப்பதுபோல, தாய்வானுக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்குவோம்” என அழைத்தது.

சீனாவின் ஆசைவார்த்தைகளை நிராகரித்த தாய்வான் அரசு, நாங்கள் ஏற்கெனவே தன்னாட்சி அதிகாரம்மிக்க ஓர் இறையாண்மைகொண்ட அரசாங்கம்தான் என அதிரடியாக அறிவித்தது. இப்படியே சீனாவிற்கும் தாய்வானுக்குமான முறுகல் நிலை தோற்றம் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button