அமெரிக்காஉலகச் செய்திகள்

மூடப்பட்டது உலகின் பிரபல சுற்றுலா தலமான மச்சு பிச்சு!

உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் மச்சு பிச்சு மூடப்பட்டுள்ளது.

தென்அமெரிக்க நாடான பெருவில் அமைந்துள்ள மச்சு பிச்சு உலகின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இந்நிலையில் பெருவில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் பாதுகாப்பு கருதி மச்சு பிச்சு மூடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த நாட்டின் சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மச்சு பிச்சு எப்போது கட்டப்பட்டது?

மச்சு பிச்சு, கஸ்கோ நகரிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலே உள்ள மலைத்தொடரில் அமைந்துள்ளது.

1450ஆம் ஆண்டு கட்டப்பட்ட மச்சு பிச்சு, கடல் மட்டத்திலிருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய நகரமாகும்.

மச்சு பிச்சை கண்டுபிடித்தவர் யார்?

இந்த நகரத்தை 1911-ல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இன்று வரை இந்நகரம் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.

கட்டட அமைப்பு!

150க்கும் மேற்பட்ட கட்டிடங்களால் உருவான மச்சு பிச்சு 50டன் எடை கொண்ட பல கற்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மலைமீது இந்த கற்கள் எப்படி கொண்டுவரப்பட்டது என்பது மிகப்பெரிய ஆச்சரியமே.

மலையடிவாரத்தில் இருந்து பார்த்தால், மலை உச்சியில் இருக்கும் கட்டிடம் பார்வைக்குத் தெரியாதவாறு கட்டப்பட்டுள்ளது.

செங்குத்தான மலைத்தொடரின் உச்சியில் 1000 பேர் வாழும்படியாக ஒரு நகரத்தை எந்தவித தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் எப்படி உருவாக்கினார்கள்? என்பது வியப்பின் உச்சம்.

மச்சு பிச்சுவின் கட்டுமானத்திற்கு இரும்பு ஆயுதங்களோ, பொதி சுமக்கும் விலங்குகளோ பயன்படுத்தப்படவில்லை என்பது தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

100க்கும் அதிகமான படிக்கட்டு வரிசைகள் இதன் வளாகத்தில் அமைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான படிகள் ஒற்றைக் கல்லைக் குடைந்து செய்யப்பட்டவையாகும்.

அஷ்லார் என்ற தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி, இரு கற்களுக்கிடையே ஒரு கத்தி நுனி கூட நுழைய முடியாத அளவு கனக்கச்சிதமாகப் பொருத்தியுள்ளது உலக அதிசயமாகும்.

இங்குள்ள இன்டிகுவாட்டானா என்ற சூரியனுக்குக் கட்டப்பட்ட ஒரு கோவில் இதன் முக்கிய பகுதியாகும்.

இந்த புனிதக் கல், வானியல் மணிக்கூடாக அதாவது, சூரிய கடிகாரமாக கருதப்படுகிறது.

தொல்லியல் நிபுணர்கள் இந்நகரம் ராஜ எஸ்டேட்டாகவும், ரகசிய சடங்கு நிறைவேற்றும் இடமாகவும் விளங்கியதாக கூறுகின்றனர்.

மனிதர்கள் செல்வதே சவாலாக இருக்கும் இந்த இடங்களில் உள்ள இந்த கட்டிடங்கள் இன்றளவிலும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது.

கடந்த 1983-ம் ஆண்டில் இந்த இடத்தை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது. 2017-ம் ஆண்டில் உலகின் புதிய 7 அதிசயங்கள் தேர்வு செய்யப்பட்டபோது, அதில் மச்சு பிச்சுவும் ஒன்றாக தேர்வானது. ஆண்டு தோறும் 10 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் மச்சு பிச்சுவை பார்வையிடுகின்றனர்.

Back to top button