உதவி பண்ணுங்க அப்பா என்று கண்கலங்கி நின்ற மகனுக்காக விஜய் எடுத்த முடிவு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி ‘வாரிசு’ திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதுடன், வசூலில் சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து தற்போது விஜய் ‘லியோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார். அதையெல்லாம் அவர் வெளியில் சொல்வது கிடையாது.
இந்நிலையில், சேனல் ஒன்றுக்கு பத்திரிக்கையாளர் செய்யார் பாலு, விஜய் குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்தார். அப்போது அவர் பேசுகையில், ஒருநாள் நான் பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த பெண்ணை நேர்க்காணல் செய்வதற்காக சென்றேன்.
அப்பெண் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அப்பெண்ணின் குடும்பம் பானை செய்யும் தொழிலை செய்து வருகிறது. அவர்கள் வீடும் மிகவும் சிறியது. வீட்டின் வறுமையால் அப்பெண் மேற்படிப்பு படிக்காமல் வீட்டில் வேலை பார்த்தார்.
அப்பெண்ணின் இந்த நிலைமையை பார்த்த நான் பத்திரிகையில் செய்தியாக வெளியிட்டேன். இதன் பிறகு சில நாட்கள் கழித்து என்னை நடிகர் விஜய் அவர் வீட்டிற்கு அழைத்தார். நானும் சென்றேன். அப்போது, விஜய் என் செய்தியை காட்டி, என் மகன் இந்தச் செய்தியை படித்தான். படித்ததும் கண் கலங்கிவிட்டான். அப்பா இந்த பொண்ணுக்கு உதவி செய்யுங்க என்று கூறினான். நானும் அந்தச் செய்தியைப் படித்தேன்.
மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்பொண்ணுக்கு உதவி செய்யணும் என்றார். இதன் பிறகு, அந்தப் பெண்ணை நேரில் சந்தித்த விஜய், அவரை சென்னையில் உள்ள ஒரு பிரபல இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார் என்று நெகிழ்ச்சியோடு அவர் பேசினார்.