சினிமா

புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு KPY பாலா நிதியுதவி

சென்னை மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு KPY பாலா நிதியுதவி செய்திருக்கிறார் சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட KPY பாலா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனதால் அவர் KPY பாலா என்று அழைக்கப்படுகிறார். அந்த ஷோவுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்த அவர் தற்போது மேடை நிகழ்ச்சிகளையும் கலகலவென தொகுத்து வழங்குகிறார்.

சினிமாவில்: சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரை கதவு திறக்கும் என்ற விதிக்கு ஏற்பட பாலாவுக்கும் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. ஜுங்கா, தும்பா, சிக்சர், காக்டெயில், புலிக்குத்தி பாண்டி, லாபம், ஆண்ட்டி இந்தியன், நாய் சேகர், தேஜாவூ, கனம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. இன்னும் சில படங்களிலும் அவர் கமிட்டாகியிருக்கிறார்.

உதவும் குணம்: சினிமாவில் இப்போதைக்கு அவர் வளர்ந்து வரும் நடிகராக இருந்தாலும் ஏகப்பட்ட பேருக்கு பல உதவிகளை செய்துவருகிறார். அனாதை இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு முதலில் உதவ ஆரம்பித்த அவர் படிப்படியாக பலருக்கும் உதவ ஆரம்பித்தார். அதன்படி காமெடி நடிகர் பாவா லட்சுமணனுக்கு சர்க்கரை நோய் காரணமாக கால் கட்டை விரல் அகற்றப்பட்டபோது அவருக்கு உதவி செய்த வெகு சிலரில் பாலாவும் ஒருவர்.

ஆம்புலன்ஸ்: அதுமட்டுமின்றி மலை கிராம மக்கள் மற்றும் முதியோர் இல்லத்துக்கு தனது செலவில் 4 ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த சம்பவமும் பலரையும் நெகிழ செய்தது. குறிப்பாக சினிமாவில் வளர்ந்து வரும் சூழலிலேயே இப்படிப்பட்ட உதவிகளை அவர் செய்வதால் கண்டிப்பாக அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும். இந்த பெரிய மனம் யாருக்கும் வந்துவிடாது என்றும் பலர் கூறுகிறார்கள்.

மிக்ஜாம் புயல்: இந்நிலையில் பாலா அடுத்த உதவி ஒன்றை செய்திருக்கிறார். அதாவது மிக்ஜாம் புயலால் சென்னை நிலைகுலைந்து இருக்கிறது. மக்கள் அனைவருமே கடுமையான கஷ்டத்தில் உழன்றுகொண்டிருக்கின்றனர். இச்சூழலில் KPY பாலா ஒரு குடும்பத்துக்கு 1000 ரூபாய் என்ற வீதத்தில் 200 குடும்பங்களுக்கு மொத்தம் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார். அவரது இந்த செயலுக்கும் பலரும் பாராட்டு தெரிவித்துவருகிறார். வளர்ந்த நடிகர்களான விஜய், அஜித் ஆகியோரே நிதியுதவி அளிக்காதபோது பாலா அளித்திருப்பது உண்மையில் பெரிய செயல் என கூறுகின்றனர். இவருக்கு முன்னதாக கார்த்தி, சூர்யா, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் மிக்ஜாம் புயல் பாதிப்புகளை சரி செய்ய நிதியுதவி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button